மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவிலில் மகாவீர் ஜெயந்தி தேரோட்டம்
செஞ்சி: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் நடந்த திருத் தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூரில் தமிழக ஜெயினர்களின் தலைமை பீடமான ஜினகஞ்சி ஜெயின் மடமும்,பழமைவாய்ந்த பார்சுவநாதர் கோவிலும் உள்ளது.
பார்சுவநாதருக்கு ஆண்டு தோறும் மகாவீரர் ஜெயந்தியன்று திருத்தேர் உற்சவம் நடத்துகின்றனர். இந்த ஆண்டு திருத்தேர் உற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பார்சுவ நாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 1008 பார்சுவநாதருக்கு திருத்தேர் உற்சவம் நடந்தது. காலை 8.30 மணிக்கு பார்சுவநாதரை தேரில் ஏற்றி வடம் பிடித்தனர்.
மேல்சித்தமூர் மடாதிபதி லட்சுமி சேன மகா சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். செஞ்சி இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.