உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூரில் முதல் முறையாக சீனிவாச திருக்கல்யாணம்

திருவள்ளூரில் முதல் முறையாக சீனிவாச திருக்கல்யாணம்

திருவள்ளூர் : திருவள்ளூரில், முதல் முறையாக, திருப்பதி - திருமலை தேவஸ்தானம் சார்பில், சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம், நேற்று நடந்தது. இதில், ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருப்பதி - திருமலை தேவஸ்தானம் சார்பில், திருவள்ளூரில் முதல் முறையாக, சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று ஐ.சி.எம்.ஆர்., அருகில் உள்ள காலி மைதானத்தில் துவங்கியது. முதல் நாளான நேற்று, காலை, யாக பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து ஸேவார்த்திகள் தரிசனம் மற்றும்
அர்ச்சனை, பக்தி பாடல் குழுவினரின் பஜனை மற்றும் கலை  நிகழ்ச்சிகள் நடந்தன.
மாலையில், திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. மேடையில்,  குபேர அம்சத்தில், வெங்கடாஜலபதி, பட்டு பீதாம்பரம் வஸ்திரம் அணிந்து, நவரத்தின அணிகலன்கள் தரித்து, அருள்பாலித்தார். அருகில், பத்மாவதி தாயார், ஏழுமலையான் திருமண கோலத்தில்
எழுந்தருளினர். திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தைச் சேர்ந்த  பட்டாச்சாரியார்கள், திருக்கல்யாண உற்சவத்தை விக்னேஸ்வர  பூஜையுடன் துவக்கினர். அங்குரார்ப்பணம் பூஜை நடத்தப்பட்டதும், ஏழுமலையான் மற்றும் பத்மாவதி தாயாருக்கு ரக் ஷா பந்தணம்
எனப்படும் கங்கணம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அக்னி பூஜை  நடத்தப்பட்டது. அதன் பின், சீனிவாச திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின், பக்தர்களுக்கு
பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்தின்  இரண்டாவது நாளான இன்று, காலை அபிஷேகம், ஊஞ்சல் சேவை மற்றும் சிறப்பு உபன்யாசம் நடக்கிறது. கடைசி நாளான நாளை,
சிறப்பு சுதர்ஸன யாகமும், தொடர்ந்து 4:00 மணிக்கு மேல், இரவு  7:00 மணிக்குள் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !