ஈரோடு மாவட்ட கோவில்களில் ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ஈரோடு: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.துர்முகி ஆண்டு நிறைவுற்று, ஹேவிளம்பி ஆண்டு நேற்று
பிறந்தது. மோளக்கவுண்டம் பாளையம் சித்தி விநாயகர், அனுக்கிரக ஆஞ்சநேயர் கோவிலில், 44வது ஆண்டு சித்திரை கனி திருவிழா நடந்தது. மாலையில் சிறுவர், சிறுமியருக்கான
விளையாட்டு போட்டிகள் நடந்தன. கள்ளுக்கடை ராம பக்த ஆஞ்நேயர் கோவிலில் சுவாமிக்கு, மா, பாலா, வாழை முதலான முக்கனிகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
* பவானி சங்கமேஸ்வரர் கோவில், ஆதிகேசவபெருமாள் கோவில், செல்லியாண்டியம்மன் கோவில், வர்ணபுரம் மாரியம்மன் கோவில், ஓம்காளியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவிலில் நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
* தமிழ் புத்தாண்டை கொண்டாட பவானிசாகர் பூங்காவுக்கு, ஈரோடு மட்டுமின்றி,கோவை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.
* புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார், கரிவரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், ஊத்துக்குழி அம்மன், ஐயப்பன் கோவில்களில், அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
* தமிழ் கடவுளான முருகனை தரிசனம் செய்ய, சென்னிமலை முருகன் கோவிலுக்கு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். ஐந்து மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி
தரிசனம் செய்தனர்.
* கோபி வேலுமணி நகர், சக்தி விநாயகருக்கு, 155 கிலோ அளவில், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, நெல்லிக்கனி, அண்ணாச்சி பழம், தர்பூசணி, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
* கொடுமுடி, கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோவிலில், 50 மூட்டை அரிசி கொண்டு சாதம் வடித்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல சிவகிரி வேலாயுதசாமி கோவில், எல்லைமாகாளியம்மன், ரமானந்தசாமிகோவில், செட்டிதோட்டம்புதூர் நாகத்தம்மன், வேட்டுவபாளையம் புத்தூரம்மன் கோவில் உள்ளிட்ட
கோவில்களிலும் சிறப்பு அலங்காரங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
* மொடக்குறிச்சி, காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 108 சங்காபிஷேகம், ருத்ர பாராயண ஹோமம் நடந்தது. நேற்று நல்ல நாயகி உடனமர்
நட்டாற்றீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.