கடலாடி வனப்பேச்சியம்மனுக்கு மட்டுமே படைக்கப்படும் அரிய வகை காஞ்சிரம் பழம்
கடலாடி: கடலாடி சமத்துவபுரம் அருகே பழமைவாய்ந்த வனப்பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள வனப்பேச்சியம்மனுக்கு விருப்பமான பழமாக
அரியவகை காஞ்சிரம் பழம் நைவேத்தியம் செய்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மதுரை அழகர்கோவில் மலைப்பகுதியில் மட்டுமே காஞ்சிரம் பழ மரங்கள் வளர்ந்துள்ளன.
வேறு இடங்களில் இவ்வகை மரங்களை காண்பது அரிதாகும். குழந்தை வரம் அளித்த அம்மனுக்கு திரும்ப வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் போது, இவ்வகை பழங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கோயில் பூஜகர் ஆர்.சண்முகசுந்தரம் கூறுகையில், இக்கோயிலில் உள்ள மூலவர் அம்மனுக்கு வாழை இலையில் காஞ்சிரம்பழங்களை குவியலாக படைக்கப்படுகிறது. இப்பழத்தை பறிப்பவர்கள் உரியமுறையில் விரதம் இருந்து பறிக்க வேண்டும். மாதுளை போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.
நச்சுத்தன்மை கொண்டதால் இதனை உண்ணக்கூடாது. தை மாதம் முதல் வைகாசி வரை காஞ்சிரம் பழம் சீசன் உண்டு. சுகந்த நறுமணம் வீசும் தன்மை கொண்டதால், இம்மரத்தின் கிளைகளில் ராஜநாகம், நாகப் பாம்புகள் மரத்தின் மீது அமர்ந்து இருக்கும்.
உயரமான இடத்தில் உள்ளதால், உயிரை பணயம் வைத்து பழங்கள் பறிக்கப்படுகின்றன. 1 பழம் ரூ.7க்கு கிடைக்கிறது. மரத்தின் கிளைப்பகுதிகள் பாம்பு செதில் போன்று காணப்படும். பல நூற்றாண்டுகாலமாக இப்பழத்தை ராக்காச்சி அம்மனுக்கு படையலிட்டு வரும் பாரம்பரியம் நடந்து வருகிறது. முன்னொரு காலத்தில் குழந்தை பேறு வேண்டிய மன்னனின், குறைகளை நீக்கியதால் ராக்காச்சியம்மனின் கோரிக்கையாக இப்பழம் தந்து
பூஜிக்கப்படுவதாக கூறப்படுகிறது. படையலுக்கு பின்னர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுகிறது. ஆவி சேட்டை உள்ளவர்கள் இப்பழத்தின் விதைகளை கோர்த்து கைகளில் கட்டிக்கொள்கின்றனர். துஷ்ட சக்திகள் அண்டாது, என்றார்.