உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று வி.ஐ.பி., தரிசனம் இல்லை

திருவண்ணாமலை கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று வி.ஐ.பி., தரிசனம் இல்லை

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியன்று, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில், வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது, என, கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா பேசினார்.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு  பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். பின், கிரிவலம் செல்வர். கார்த்திகை தீப திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி தினத்தில், இதை விட, இரு மடங்கு பக்தர்கள் கிரிவலம் செல்வர். மே 10 அதிகாலை, 1:50 மணி முதல், 11 அதிகாலை, 3:30 மணி வரை, பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என,
கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்று சித்ரா பவுர்ணமி என்பதால், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு முன்னேற்பாடு வசதி செய்வது குறித்து ஆலோசனை கூட்டம், நேற்று மாலை, 6:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த்.மு. வடநேரே தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா பேசியதாவது: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, அன்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு, 11:00 மணி வரை நடை திறந்திருக்கும். இலவச தரிசனம் மற்றும் விரைவில் சுவாமி தரிசனம் செய்ய, 50 ரூபாய் கட்டண தரிசன வசதி செய்யப்படும். பக்தர்களின் நலன் கருதி, அமர்வு தரிசனம் மற்றும் வி.ஐ.பி., தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில், மூன்று இடங்களில் கட்டணமில்லா இளைப்பாறும் கூட அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். எஸ்.பி., பொன்னி, பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக, 2,100 போலீசார் பணியில்
ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்றார். போக்குவரத்து கழகம் சார்பில், ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, 2,146 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கவும், கழிப்பிட வசதி செய்து தருதல் உள்ளிட்ட பணிகள் செய்ய தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !