அழகான அழகருக்காக அழகான அலங்கார ஆடைகள்!
மதுரை: வாராரு வாராரு அழகர் வாராரு... சப்பரம் ஏறி வாராரு நம்ம சங்கடம் தீர்க்கப் போறாரு... என, ஆனந்தமாய் ஆடி, பாடி அலங்கார பிரியன் அழகரை வரவேற்க நம்மில் பலர் தவமாய் தவமிருந்து காத்திருக்கிறோம். மதுரை வரும் அழகான அழகரை, அழகான ஆடைகளுடன் தரிசிக்க வேண்டும் என்ற ஆசையில் பக்தர்கள் பலர், வண்ண ஆடைகள் வாங்க அலைகடலென ஆர்வமாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மதுரையில் எத்தனை பெரிய ஷாப்பிங் மால்கள் இருந்தாலும், பாரம்பரிய அலங்கார பொருட்கள் எல்லாம் குவிந்து கிடக்கும் புதுமண்டபம் ஒரு ஆன்மிக ஷாப்பிங் மால் என்று சொன்னால் மிகப் பொருத்தமாக இருக்கும். அழகருக்காகவும், அழகராக, கருப்பனாக வேடம் அணியும் பக்தர்களுக்காவும் புதுப்பொலிவுடன் புன்னகைக்கும்
புது மண்டபத்திற்குள் ஒரு சித்திரை திருவிழா விசிட்...
அழகான அணிகலன்கள்: வைகை ஆற்றில் இறங்க வரும் அழகரை காண அவரைப் போல வேடம் மட்டும் அணிவதில்லை, விரதமிருந்து மாலையும் அணிவார்கள். அவர்களுக்காகவே இங்கு துளசி, சந்தனம், அழகர் கைகாப்பு போன்ற அழகான அணிகலன்கள் கிடைக்கும். கருப்பசாமி வேடமிடும் பக்தர்களுக்கு ஐந்து முகம் கொண்ட ருத்ராட்ச மாலை விற்பனைக்கு உள்ளது. தவிர, தாமரை விதை மாலை, பால்பாசி என, ஆன்மிக நிகழ்வுகளுக்கு தேவையான அனைத்து வித மாலைகளும் பழமை மாறாத தன்மையுடன் விற்கிறோம். பாண்டி
அருளோடு வரும் பொருள்: சித்திரை திருவிழா ஒரு ஆன்மிக நிகழ்வு மட்டுமல்ல, எளியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு பெருவிழா. ஆம், புதுமண்டபத்தில் விற்பனையாகும் அலங்கார பொருட்கள், அழகர் ஆடைகளில் நெல்பேட்டை, சக்கிமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் சிறு தொழிலாளர்களின் கை வண்ணங்கள் ஒளிந்திருக்கின்றன. இவர்கள், தைத்து முடித்த ஆடைகளை அலங்கார பூக்கள், பாசிகள், கயிறுகளை கொண்டு மெருகேற்றி கொடுக்கிறார்கள். அண்ணன் அழகரும், தங்கை மீனாட்சியும் அருளோடு, பொருள் வரும் அற்புதங்களை நிகழ்த்துகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். வேண்டும் வரம் தருவார் நான் 5 வயதில் இருந்து அழகருக்காக தண்ணீர் பீய்ச்சி வருகிறேன். என் தந்தை பல ஆண்டுகளாக தீப்பந்தம் எடுத்து வருகிறார். திருவிழா துவங்கியதும் விரதமிருந்து, தினமும் நெற்றியில் அழகர் பாதம் வரைந்து அழகரை மனம் உருகி வேண்டி வழிபடுவோம். என் திருமணத்திற்கு பின் அழகரிடம் குழந்தை வரம் கேட்டு கோரிக்கையுடன் தண்ணீர் பீய்ச்சினேன். நான் எதிர்பார்க்காத வகையில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. நாம் கேட்கும் வரங்களை விட, கூடுதலாக, கேட்காத வரங்களையும் அள்ளித்தருவதில் அழகருக்கு நிகர் அழகர் தான். கண்ணன்
அன்பும் ஆன்மிகமும்: சுவாமி அழகர் மேல் அதிக பக்தியும், அன்பும் கொண்ட சிலர், அழகர் வேடம் அணிய விரும்பும் பக்தர்களுக்கு ஆடைகளை இலவசமாக வாங்கி கொடுக்கும் சேவையையும் செய்கிறார்கள். அழகர் வேடம் அணிவது ஒரு வகை நேர்த்திக்கடன் என்றால், அதை வாங்கி மற்றவருக்கு கொடுத்து அணியச் செய்வதும் கூட ஒரு நேர்த்திக்கடன் தான். இது போல மதுரையின் சித்திரை திருவிழா அன்பும், ஆன்மிகமும் சங்கமிக்கும் விழாவாக திகழ்கிறது.
அலங்கார பிரியர் அழகர்
அழகர் என்றாலே அழகானவர் என்று தான் பொருள். அழகாகவே இருக்கும் நம் அழகரும் ஒரு அலங்கார பிரியர் தான். தன் அழகால் நம் மனதை கொள்ளை கொள்ள மதுரை கிளம்பும் கள்ளழகருக்கு, அந்த காலத்தில் குறிஞ்சி மலர்களை சூடி அழகு பார்த்திருக்கிறார்கள். இன்று, குறிஞ்சி மலர்கள் இல்லாத காரணத்தால் அழகருக்கு பூ அலங்காரம் செய்து அழகு பார்க்கிறார்கள். இதையே பூ பல்லாக்கு நிகழ்ச்சியாகவும் நடத்துகிறார்கள். அழகரை போல அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் பக்தர்கள், அலங்கார ஆடை அணிந்து அழகரை வரவேற்கிறார்கள்.