நெல்லையப்பர் கோயிலில் மழைநீர்: ஜெட்ராடிங் மிஷின் மூலம் வெளியேற்றம்!
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் தேங்கியிருந்த மழைநீர், ஜெட்ராடிங் மிஷின் மூலம் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. நெல்லை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள விஜிலா சத்தியானந்த் கடந்த சில தினங்களுக்கு முன் நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் மழைநீர் கோயிலில் முழங்கால் அளவிற்கு தேங்குவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மழைக் காலத்தில் கோயிலில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு மேயர் விஜிலா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கமிஷனர் அஜய்யாதவ், உதவிக் கமிஷனர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் நெல்லையப்பர் கோயிலில் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தனர். கோயில் செயல் அலுவலர் கசன்காத்த பெருமாள் மற்றும் கோயில் ஊழியர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து மாநகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக வாங்கப்பட்டுள்ள ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஜெட் ராடிங் மிஷின் வரவழைக்கப்பட்டது. கமிஷனர் அஜய்யாதவ், உதவிக் கமிஷனர் கருப்பசாமி, இளநிலைப் பொறியாளர் பாஸ்கர், செயல் அலுவலர் கசன்காத்த பெருமாள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மற்பார்வையில் மழைநீர் கழிவுகள் அகற்றும் பணி துவங்கியது. தேருக்கு அருகேயுள்ள ஓடையில் ஆட்கள் இறங்கி வேலை செய்ய முடியாத இடத்தில் தேங்கியிருந்த கழிவுகள் ஜெட் ராடிங் மிஷினில் இருந்து 120 பிஎஸ்ஐ அழுத்தத்தில் தண்ணீர் அடித்து உடனடியாக அகற்றப்பட்டன. இதையடுத்து கோயிலில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது. மாநகராட்சியின் துரிதப்பணிகளை கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பாராட்டினர்.