சித்திரை திருவிழா திருப்புவனம் வைகையில் திருமால் அழகர்
திருப்புவனம்: திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 119வது சித்திரை திருவிழா நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை பொன்னிற குதிரை வாகனத்தில் கோயிலை விட்டு கிளம்பிய திருமால் அழகருக்கு வழியெங்கிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். காலை 9:30 மணிக்கு புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் எதிரே வைகை ஆற்றில் பச்சைபட்டு உடுத்தி பக்தர்களின் கோவிந்தா கோஷத்தின் இடையே திருமால் அழகர் இறங்கினார்.
பச்சை பட்டு உடுத்தி இறங்கியதால் இந்தாண்டு மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் தெரிவித்தனர். திருமால் அழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏராளமான மண்டகப்படியில் எழுந்தருளிய அழகருக்கு தீபம் காட்டி பக்தர்கள் வழிபட்டனர்.