அகரம் பெருமாள் கோவில் கோபுரம் காப்பாற்றப்படுமா?
அகரம் : அகரம், வைகுண்ட பெருமாள் கோவில் கோபுரத்தின் மீது வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சி, அகரம் கிராமத்தில், பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 10
ஆண்டுகளுக்கு முன், 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று, நாள்தோறும் நித்திய பூஜைகள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தற்போது கோவில் முறையாகப் பராமரிக்கப்படாமல், கோவில் கோபுரத்தின் மீதும், மண்டபத்தின் மீதும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதேநிலை
நீடித்தால், கோபுரத்தின் மீது வளர்ந்துள்ள செடிகள் பெரிதாக வளர்ந்து கோபுரத்தில் விரிசல் விழும் நிலை ஏற்படும் என, பக்தர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையின் ஓரத்தில், அகரம் பகுதியில் உள்ள இப்பழமை வாய்ந்த வைகுண்ட பெருமாள் கோவிலை அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை செய்து கோவிலை பாதுகாக்க வேண்டும் என, கிராமவாசிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.