கள்ளழகரை வரவேற்க்கும் மதுரை மக்கள்: எதிர்சேவையில் பரவசம்!
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து
புறப்பட்டு, மதுரை வந்தார் கள்ளழகர். மூன்று மாவடி, புதுாரில் சர்க்கரை,
பொரி கடலை கலந்து வைத்த செம்பில் சூடம் ஏற்றி பக்தர்கள் எதிர்சேவை செய்து
வருகின்றனர்.
கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்புடன்
தங்கப் பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர். நாளை (மே 10) காலை
6.15 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்களின் ’கோவிந்தா’ கோஷம் முழங்க, மதுரை
வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயில்
விழாக்களில், கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை
திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றது. இவ்விழாவை காண, பல்வேறு பகுதிகளில்
இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவர். சிறப்பு மிக்க
சித்திரை திருவிழா, மே 6ல் துவங்கியது. முதல் 2 நாட்கள் மாலையிலும், நேற்று
காலையும் தோளுக்கினியான் அலங்காரத்தில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ
பெருமாள், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
மதுரைக்கு புறப்பட்டார் :
சித்திரை திருவிழாவின் முக்கியமான, வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, நாளை
நடக்கிறது. இதற்காக நேற்று மாலை 5.30 மணிக்கு, கண்டாங்கி பட்டு உடுத்தி,
கையில் நேரிக்கம்புடன், கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப் பல்லக்கில்
கோயிலில் இருந்து புறப்பட்டார். கோயில் ராஜ கோபுரத்தில் வீற்றிருக்கும்
காவல் தெய்வமான 18ம் படி கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று, இரவு 7:00
மணிக்கு கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார். வழியில் பக்தர்கள்
அமைத்துள்ள, மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், இன்று (மே 9) காலை 6
மணிக்கு மூன்றுமாவடி வந்தார் . அங்கு பக்தர்கள் சார்பில் எதிர்சேவை
நடைபெற்றது. தொடர்ந்து புதுாரிலும், மாலை 5 மணிக்கு அவுட்போஸ்டிலும்
எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில்
திருமஞ்சனம் நடக்கிறது.
ஆற்றில் இறங்குகிறார் : மே 10ம் தேதி
அதிகாலை 2:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை
ஏற்றுக் கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், தல்லாகுளம்
கருப்பண சுவாமி சன்னதி எதிரில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன்
சப்பரங்களில் எழுந்தருளுகிறார். பின் அங்கிருந்து புறப்படும் அவர் காலை
6:15 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் பக்தர்களின் ’கோவிந்தா’ கோஷம் முழங்க
வைகை ஆற்றில் இறங்குகிறார்.