உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நலம் பல தந்து நல்வழிகாட்டும் நரசிம்ம ஜெயந்தி!

நலம் பல தந்து நல்வழிகாட்டும் நரசிம்ம ஜெயந்தி!

விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரம். ஏனெனில், ஒரு பக்தனின் சொல்லைக் காப்பாற்ற விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார். மனிதனுக்கு வாக்கு சுத்தம் மிக முக்கியம். ஒன்றைச் சொன்னால், அதைச் செய்தாக வேண்டும். வாக்கு தவறினால் அவனுக்கு மதிப்பு போய்விடும். தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற, தன் உயிரையும் கொடுத்ததால் தான், இன்றும் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார்.இதே போல, பிரகலாதனின் வார்த்தையைக் காப்பாற்ற கம்பத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார் நரசிம்மன்.

“அடேய் பிரகலாதா! எங்கேயடா இருக்கிறான் உன் விஷ்ணு? என்று கேட்கிறான் இரண்யன். “தந்தையே! அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான். ஏன்...எங்கும் வியாபித்திருக்கிறான். ஒவ்வொரு துகளிலும் அவன் உட்கார்ந்திருக்கிறான், என்றான் பிரகலாதன்.இதைக்கேட்ட விஷ்ணு பரபரப்பாகி விட்டார். “இந்தப் பொடியன், நாம் எங்கிருக்கிறோம் என கையைக் காட்டுவானோ! அங்கிருந்து உடனே வெளிப்பட்டாக வேண்டுமே! எனவே, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து காத்துக் கிடந்தான்.

பிரகலாதன் தூணைக் கை காட்ட, இரணியன் அதை உடைத்தான். மனித உடலும், சிம்ம முகமும் கொண்டு நரசிம்மனாய் அவன் வெளிப்பட்டான். ‘நரன் என்றால் ‘மனிதன். ‘சிம்மம் என்றால் ‘சிங்கம். இதனால் தான் அவனை ‘நரசிம்மன் என்றும், ‘நரசிங்கன் என்றும் சொல்வார்கள். மதுரை அருகே அவன் கோயில் கொண்டுள்ள ஊருக்கே ‘நரசிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.தூணிலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருணைக்கடல், இரணிய வதத்தை முடித்த பிறகு, பிரகலாதனிடம், “நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்றான். “ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என்ற பிரகலாதனிடம், தூண் என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே! என்றானாம்.ஆம்.. நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும். லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் 108 தடவைசொல்லி வழிபடுவோர் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

கைமேல் பலன் தரும் நரசிம்ம ஸ்லோகம்: அகோபில மடத்தின் 44வது பட்டம் அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் இயற்றப்பட்டது நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம். இதை தினமும் பக்தியுடன் சொல்லி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நினைத்தது எளிதில் கைகூடும். நைவேத்யமாக பசும்பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் படைப்பது நல்லது. கைமேல் பலன் தரும் இந்த ஸ்லோகத்தை 48 நாட்கள் சொல்வது சிறப்பு.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

இந்த ஸ்லோகத்தை சொல்ல முடியாதவர்கள் இதன் பொருளைச் சொன்னாலே பலன் உண்டு.

பொருள்: நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை! சகோதரனாகவும், தோழனாகவும் இருப்பவனும் அவனே அறிவும், செல்வமாகத் திகழ்பவனும் அவனே தான். நமக்கு எஜமானனாகவும், எல்லாமுமாகவும் நரசிம்மனே விளங்குகிறான். பூலோகம், விண்ணுலகத்திலும் நரசிம்மனே அருள்புரிந்து கொண்டிருக்கிறான். நாம் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவனே வீற்றிருக்கிறான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாருமில்லை. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !