உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை திருவிழா: நாளை மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை சித்திரை திருவிழா: நாளை மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை: மதுரை தேனுார் மண்டபத்தில் நாளை (மே 11) மதியம் 2:00 மணிக்கு மேல், சுந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் வந்து, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அருள்பாலிக்கிறார். அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள், சித்ரா பவுர்ணமியன்று, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று கொள்ளவும், கள்ளர் திருக்கோலத்துடன் மதுரைக்கு எழுந்தருளி உள்ளார். இன்று, லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.

சாப விமோசனம் : வைகை ஆற்றில் வையாழி ஆனவுடன் வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றுதல் நடக்கிறது. பின் அங்கிருந்து புறப்படும் கள்ளழகர், மதியம் 12:00 மணிக்கு ராமராயர் மண்டபத்திலும், இரவு 11:00 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலும் எழுந்தருள்கிறார். நாளை (மே 11) காலை 9:00 மணிக்கு வண்டியூர் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகி, தேனுார் மண்டபத்திற்கு காலை 11:00 மணிக்குஎழுந்தருள்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அருள்பாலிக்கிறார். மதியம் 3:30 மணிக்கு அங்கப்பிரதட்சணம், இரவு 11:00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் திருமஞ்சனம், இரவு 12:00 மணி முதல் தசாவதாரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !