போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வெண்பட்டு உடுத்தி இறங்கினார்
போடி, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் வெண்பட்டு உடுத்தி கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் காலை 6:30 மணிக்கு இறங்கினார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அதன் பின் புதுார், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட தெருக்களில் நகர்வலம் வந்து அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சி நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்கத்தலைவர் வடமலைராஜையபாண்டியன் தலைமையில் நடந்தது.
முன்னாள் தலைவர் குமரன், விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் கட்டாரி பாண்டியன், மத்திய சங்க செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகிகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.
*உப்புக்கோட்டையில் வரதராஜபெருமாள் முல்லையாற்றில் பக்தர்கள் கோஷத்துடன் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். உப்புக்கோட்டை, உப்பார்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* போடி அருகே தீர்த்ததொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சித்திரபுத்திரனார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: பெரியகுளத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து சுவாமி ராஜஅலங்காரத்தில் கள்ளழகராக துாறல் மழையில் வராக நதி கரையோரம் பச்சை பட்டு உடுத்தி, கருப்பு நிற பொட்டுடன் குதிரை வாகனத்தில் காட்சியளித்தார். மழை வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து வீதி உலா சென்ற கள்ளழகர் வராகநதி படித்துறைகளில் 34 மண்டகபடிதாரர்கள் ஏற்பாடு செய்திருந்த மண்டபங்கள் மற்றும் கோயில்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அர்ச்சகர்கள் கூறுகையில், விவசாயம் செழிக்கும் என்பதை உணரும் விதமாக கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தியும், கருப்பு பொட்டும் வைத்து காட்சியளித்தார். வரும்காலங்களில் நல்லமழை பெய்து தானிய விருத்தி உட்பட சகல ஐஸ்வர்யங்களும் ஏற்படும்,என்றனர்.