அழகர்கோவில் சித்திரை திருவிழா: உற்சவ சாந்தியுடன் நிறைவு
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்குதல் உட்பட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலித்து நேற்று காலை கோயிலுக்கு திரும்பிய கள்ளழகரை பக்தர்கள் மலர் துாவியும், திருஷ்டி சுற்றியும் வரவேற்றனர். அழகர்கோவில் சுந்தர ராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே6ல் துவங்கியது. மே 10ல் தங்க குதிரைவாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி முன் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளினார். காலை 6.20 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா ’கோஷம் முழங்க வைகையில் இறங்கினார். நேற்று காலை 11:20 மணிக்கு அழகர் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகருக்கு 18ம் படி கருப்பணசுவாமி சன்னதியில் தீபாராதனை நடந்தது. கோயிலுக்குள் வந்த கள்ளழகரை அங்குதிரண்டிருந்த ஏராமான பக்தர்கள் மலர்கள் துாவி ‘கோவிந்தா ’ கோஷம் முழங்க வரவேற்றனர். 18 பெண்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி கள்ளழகரை 3 முறை சுற்றி வந்து திருஷ்டி கழித்தனர். கோயிலுக்குள் சென்ற கள்ளழகருக்கு தீபஆராதனை நடந்தது. இன்று உற்சவசாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.