காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் வெள்ளி தேர் திருவிழா
ADDED :3150 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவத்தில், நேற்று வெள்ளித்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. அதில், பல வகையான வாண வேடிக்கைகளை மக்கள் கண்டு ரசித்தனர். காஞ்சிபுரத்தில் முக்கிய சிவன் கோவில்களில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவிலும் ஒன்றாக உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி ஊர்வலம் நடந்து வருகிறது. இதில், முக்கிய விழாவான நேற்று காலை, நடராஜர் தரிசனம், இரவு, வெள்ளித்தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. அதில், பொதுமக்களை கவரும் வகையில், பல வகையான வண்ண வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, நான்கு ராஜ வீதிகளில், வெள்ளித்தேரில் கச்சபேஸ்வரர் பவனி வந்தார்.