உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாங்கூரில் பன்னிரு ரிஷபாரூட காட்சி: பக்தர்கள் தரிசனம்

திருநாங்கூரில் பன்னிரு ரிஷபாரூட காட்சி: பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை: திருநாங்கூரில் பன்னிரு திருத்தலங்களில் இருந்து பன்னிரு மூர்த்திகள் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி  மதங்க மகரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, மதங்காஸ்ரமம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய திருநாங்கூர் கிராமத்தை சுற்றி, பாடல்பெற்ற, பழைமை வாய்ந்த 12 சிவாலயங்கள் உள்ளன. இந்த தலத்தில் மதங்க மகரிஷியின் மகளாக அம்பாள் பிறந்து, வளர்ந்து வந்ததாகவும், மாதங்கினி என்ற பெயரில் அவரை இறைவன் திருமணம் புரிந்ததாகவும் வரலாறு கூறுகின்ற ன. இதனையொட்டி மதங்க மகரிஷிக்கு பன்னிரு மூர்த்திகளும் திருமணக்கோலத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, 12 சிவாலயத்தில் இருந்து சுவாமிகள், நாங்கூருக்கு எழுந்தருளி, திருமணக்கோலத்தில், ரிஷபாரூடராக காட்சி அளிக்கும் திருவிழா நேற்றுஇரவு நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு திருநாங்கூர்  மதங்கீஸ்வர சுவாமி,  கைலாசநாத சுவாமி, ஜுரஹரேஸ்வர சுவாமி,  நம்புவார்கன்யர் சுவாமி, திருக்காட்டுபள்ளி  ஆரண்யேஸ்வர சுவாமி, திருயோகீஸ் வரம்  யோகநாத சுவாமி, காத்திருப்பு  சொர்ணபுரீஸ்வர சுவாமி, செம்பதனிருப்பு  நாகநாத சுவாமி, திருமேனிக்கூடம்  சுந்தரேஸ்வரசுவாமி, பெருந்தேட்டம்  ஐராவதேஸ்வர சுவாமி, அன்னப்பன்பேட்டை  கலிகாமேஸ்வரசுவாமி, நயனிபுரம்  நயனவரதேஸ்வர சுவாமி ஆகிய பன்னிரு திருத்தலங்களில் இருந்து சுவாமிகள், திருநாங்கூர்  நம்புவார் கன்யர் சுவாமி கோயிலில் எழுந்தருளினர். பன்னிரு மூர்த்திகளுக்கும் ஒரேநேரத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பன்னிரு மூர்த்திகளும், அம்பாளுடன் ரிஷப வாகனத் தில் எழுந்தருளி  மதங்க மகரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு வீதியுலாக்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நமச்சிவாயா என கோஷமிட்டு சுவாமி,அம்பாளை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்கள் கோபி, முருகையன், சென்னை மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !