ஆன்மிக சபா கலைப்பு விவகாரம்: வீண்பழி சுமத்துவதாக குற்றச்சாட்டு
மோகனூர்: சபா கலைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் கழித்து, உண்மைக்கு புறம்பாகவும், சபா மீது வீண் பழி சுமத்தும், கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
அசலதீபேஸ்வரர் பரிபாலன ஆன்மீக சபா தலைவர் பாலுசாமி, பொருளாளர் சக்திவேல் ஆகியோர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் பழமையான அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 2009ல் நடந்தது.
இக்கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கும், திருப்பணிக்காகவும், அசலதீபேஸ்வரர் பரிபாலன ஆன்மீக சபா என்ற பெயரில், ரசீது மூலம் நன்கொடை பெறப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும், சபாவின் குழுக்கள் கலைக்கப்பட்டன. ஆனால், ஒன்பது ஆண்டுகள் கழித்து, ஆன்மீக சபா மீது வீண் பழியும், அவதூறு செய்திகளும் பரப்பி, பொதுமக்கள் மத்தியில், பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில், கோவில் செயல் அலுவலர் ஈடுபட்டு வருகிறார்.
ஆன்மீக சபா எந்த தவறும் செய்யவில்லை. உண்மைக்கு புறம்பாக செயல்படும் செயல் அலுவலர் மீது விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.