கோவில் யானை குளிக்க பழநியில் நீச்சல் குளம்
ADDED :3093 days ago
பழநி: பழநி முருகன் கோவில் யானை கஸ்துாரி, இயற்கையான சூழ்நிலையில் குளிப்பதற்காக, பல லட்சம் ரூபாய் செலவில், புதிய நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது. பழநி கோவில் யானை கஸ்துாரி, 8 வயது முதல், பெரியநாயகியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் வளர்க்கப்படுகிறது. தற்போது, 49 வயதாகும் கஸ்துாரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற விழாக்களில் பங்கேற்கிறது. இந்த யானை குளிப்பதற்காக, பெரியநாயகியம்மன் கோவில் வளாகத்தில், ஏற்கனவே, ஷவர் பாத் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காரமடை தோட்டத்தில், இயற்கையான சூழ்நிலையில் யானை இறங்கி குளிக்கும் வகையில், புதிதாக நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது. பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.