குழந்தைவரம் தரும் ஈஸ்வரன் கோயில்
தேவதானப்பட்டி: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவதானப்பட்டி அடுத்த தர்மலிங்கபுரம் அருகில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது ஈஸ்வரன் கோயில். பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் பன்றிமலையில் இருந்து இருவர் குழந்தை வரம் வேண்டி சுருளிக்கு நடை பயணமாக வந்துள்ளனர். தேவதானப்பட்டியை கடந்து தற்போது தர்மலிங்கபுரம் என்று அழைக்கப்படுகின்ற தண்ணீர் தானம் என்ற இடத்திற்கு வந்த போது, அவ்வழியாக சென்ற மக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்த இரண்டு பெரியவர்கள், இவர்களை அழைத்து தாகம் தீர்த்து செல்லும் படி கூறியுள்ளனர். எங்கு செல்கிறீர்கள் என்று கேட்ட போது குழந்தை வரம் வேண்டி சுருளி செல்வதாக கூறியுள்ளனர். அப்போது நீங்கள் வேண்டிய வரம் இங்கேயே கிடைக்கும் எனக்கூறி மறைந்து விட்டனர். அதன் பிறகு இங்கிருந்த ஈஸ்வர லிங்கத்தை வழிபட்டு சென்றனர்.
காலப்போக்கில் அவர்களுக்கு வாரிசுகள் பிறந்தது. பின்னர் மக்களால் கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயிலில் மூலவர் ஈஸ்வரனுடன் விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இங்குள்ள வில்வ மரம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். கிணறும் உள்ளது. குழந்தைவரம் கொடுக்கும் ஈஸ்வரன் கோயில் இப்பகுதியில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். அதற்கான பலரும் வேண்டிச்சென்று நினைத்தது நடந்துவிட்டதாக கூறுகின்றனர். பிரதோஷ வழிபாடு, சித்திரை முதல் தேதி, தை பொங்கல், சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேல்விபரங்கள் அறிய பூஜாரி முருகேசனை 96558 65071 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.