புனித அந்தோணியார் கோவில் தேர்த் திருவிழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி புனித அந்தோணியார் கோவில் தேர்த் திருவிழாவில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி பதுவை நகரில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில், 47ம் ஆண்டு தேர்த் திருவிழா, கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அன்று மாலை நவநாள் திருப்பலி, மறையுரை, தேர்பவனி, கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது. கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல பங்குத்தந்தை சூசைராஜ் பங்கேற்றார். 7 மற்றும் 8 மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை திருவிழா சிறப்பு தியானம் நடந்தது. இதை சோகத்தூர் கார்மேல் தியான இல்ல இயக்குனர் ஸ்டீபன் முன்னின்று நடத்தினார். 9 மற்றும் 10ல் சிறப்பு நவநாள் திருப்பலியை ஆரிசாம்சன் முன்னின்று நடத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, தர்மபுரி மறைமாவட்ட முதன்மை குரு சூசை தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, காலை, 8:30 மணிக்கு புதுநன்மை, திருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இரவு, 9:15 மணிக்கு, சுண்டம்பட்டி விடிவெள்ளி மையம் அதிபர் பிரிட்டோ மந்திரிப்புடன் புனிதரின் அலங்கார ஆடம்பர தேர்பவனி, வாண வேடிக்கையுடன் நடந்தது. விழாவில், கிருஷ்ணகிரி, சுண்டம்பட்டி, எலத்தகிரி, ஒரப்பம், கந்திகுப்பம், பர்கூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.