உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடிப்படை வசதிகள் இல்லை: நவபாஷாண கோயிலில் பக்தர்கள் தவிப்பு

அடிப்படை வசதிகள் இல்லை: நவபாஷாண கோயிலில் பக்தர்கள் தவிப்பு

ராமநாதபுரம்: தேவிபட்டினத்தில் பரிகார கோயிலான நவபாஷாண கோயில் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் தவித்து வருகின்றனர்.  தேவிபட்டினம் கடற்கரைப்பகுதியில் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன.நவக்கிரங்களின் பரிகார பூஜை இங்கு செய்யப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் பரிகாரம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த கோயில் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி ஏதும் இல்லை. உடை மாற்றும் அறை: பக்தர்கள் பரிகார பூஜை செய்து, நவபாஷாண தீர்த்தத்தில் நீராடி விட்டு, தங்களது உடைகளை மாற்றுவதற்காக இரு அறைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக மேற்கூரையில் உள்ள காரைபூச்சுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது செயல்பாட்டில் இல்லாததால், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.  கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன இந்த கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லை.   தண்ணீர் இல்லாததாலும், கதவுகள் உடைந்திருப்பதாலும், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கோயில் வளாகத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகள்,சேதமடைந்துள்ளது. இருள் சூழ்ந்துள்ளதால், இரவு நேரங்களில் நவபாஷான கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது. நவபாஷாண தீர்த்தத்திற்கு பரிகார பூஜைக்கு வரும் பக்தர்களுக்கு அறநிலையத்துறை, சார்பில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு பரிகார பூஜைக்கு 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அங்குள்ள  சிலர் சுற்றுலாப்பயணிகளிடம் ஏமாற்றி அதிகளவில் பணம் கறந்து விடுகின்றனர்.  இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுத்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !