34 ஏக்கர் கோவில் நிலம் தனியாரிடமிருந்து மீட்பு
திருப்பூர்: தாராபுரம் அருகே, கோவிலுக்கு சொந்தமான, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, 34 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே, பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, மணக்கடவு கிராமத்தில், 34.19 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு, 1 கோடி ரூபாய். இந் நிலம், பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. பழைய ஆவணங்களின் அடிப்படையில், கோவில் நிலங்களை கண்டறிந்து, மீட்க அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், தேர்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் கண்டறியப்பட்டது. தனியார் ஆக்கிரமித்து அனுபவித்து வந்த நிலத்தை மீட்க, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது; ஆக்கிரமிப்பாளர்கள், நிலத்தை விட்டு வெளியேற, நோட்டீஸ் வழங்கப்பட்டது. காலி செய்யாததால், அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று, நேற்று நிலத்தை மீட்டனர். அப்பகுதியில், கோவிலுக்கு சொந்தமான நிலம்; யாரும் நுழையக்கூடாது என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.