கள்ளிமடை காமாட்சியம்மன் கோவில் திருவிழா
கோவை : கள்ளிமடை காமாட்சியம்மன் கோவில் திருவிழா, 23 ஆண்டுகளுக்கு பின் களைகட்டியது. அம்மனை அலங்கரித்தும், பொங்கல் வைத்து படைத்தும் ஊர் மக்கள் அம்மன் அருள் பெற்றனர். சிங்காநல்லுார் அருகேயுள்ள கள்ளிமடையில் பழயைமான காமாட்சியம்மன் கோவில் உள்ளது. உள் மண்டபம், விநாயகர், மாரியம்மன், காமாட்சியம்மன் சந்நிதிகளுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு, 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருவிழா நடந்தது. கடந்த, 9ம் தேதி, கணபதி ஹோமம், பூச்சாட்டு அம்மன் கொலு வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜையில் முதற்கால வேள்வியும், பேரொளி வழிபாடு, மூலமந்திர ஹோமம், அம்மனுக்கு சிறப்பு பூஜை, திருவிளக்கு பூஜை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த, 16ம் தேதி காமாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து, மாரியம்மன், காமாட்சி அம்மன்கள் அலங்கரிக்கப்பட்டு, வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மன்களை தரிசித்தனர். பக்தர்கள் பால் குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.