பெருநகர் ஆஞ்சநேயருக்கு மஹா கும்பாபிஷேகம்
பெருநகர்: பெருநகர் ஆஞ்சநேயர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில், பெருநகர் அருகே, ஆபத்ஸகாய அனுக்கிரக வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டடத்தின் சில பகுதிகள் சிதிலமடைந்திருந்ததை அடுத்து, கோவிலில் திருப்பணி மேற் கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால், நேற்று காலை , 10:00 மணிக்கு, மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. முன்னதாக, கடந்த சனிக்கிழமை மாலை, புண்யாவாஸனம், அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை,கும்ப ஆராதனை, பூர்கா ஹூதி உள்ளிட்ட பூஜைகளும், நேற்று முன்தினம் மாலை மகாசாந்தி அபிஷேகம், கடம் புறப்பாடு, அக்னி பிரதிஷ்டை மூலஹோமம் ஆகிய பூஜைகளும் நடந்தன. இந்த விழாவில் பெருநகர், இளநகர், சேத்துபப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.