உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை

விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜை

திருப்பூர் : சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான, திருவாசகம் அருளிய மாணிக்கவாசகரின் குருபூஜை, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்றது. சிவ பக்தரான மாணிக்கவாசகர், எட்டாம் நுõற்றாண்டில், திருவாதவூரில் பிறந்தவர். பாண்டிய மன்னர் அரிமர்த்தன பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்தவர். குரு சீடர் பக்தி நெறி உடையவர். ஆவியும், உடலும், உடைமை எல்லாமும், இறைவன் திரு வடிக்கே என வாழ்ந்தவர். நமச்சிவாயா வாழ்க;  நாதன் தாழ் வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க என்று பாடியவர். மன்னருக்காக குதிரைகள் வாங்க சென்றவர், குரு வடிவாக காட்சியளித்த சிவபெருமானின் திருவடி பணிந்தார். மன்னர் குதிரைகளை கேட்க, இறைவன் திருவிளையாடலால், நரி பரியாகி, அரசவைக்கு வந்து, மீண்டும் நரியானது. வைகை ஆற்று மணலில்  தண்டனை கொடுக்கப்பட்ட மாணிக்கவாசகரை காப்பாற்ற, வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தினான் இறைவன். பிட்டுக்கு மண் சுமந்தது என, மாணிக்கவாசகருக்காக இறைவன் திருவிளையாடல் புரிந்தார். அவரது குரு பூஜை விழா, நேற்று திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நடைபெற்றது. விஸ்வேஸ்வரர் கோவிலில்,  அர்த்தசாம பூசை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடந்த பூஜையில், மாணிக்கவாசகர் உள்ளிட்ட நால்வருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதேபோல், அவிநாசிலிங்ககேஸ்வரர் மற்றும் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலிலும், மாணிக்கவாசகர் குரு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, சந்திர சேகரர், கருணாம்பிகை அம்மனுடன், மாணிக்கவாசகர் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.  இதில், ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !