ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் பிரம்மோற்ஸவ விழா தேரோட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் பிரம்மோற்ஸவ விழா தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோதண்டராம சுவாமி கோயில் பிரம்மோற்ஸவ விழா ஜூன் 24 ம் தேதி அனுக்ஞையுடன் துவங்கியது. இதில் ராமநாத சுவாமி திருவிழாக்காலங்களில் காலை பல்லக்கும், இரவு தோளுக்கினியான் வாகனம், சிம்மவாகனம், ஆஞ்சநேய வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், இந்திர விமானம், புஷ்ப பல்லக்கு, குதிரை வாகனங்களில் தோண்டராமசுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது. இதில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஜூலை முதல் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு தேரில் ராமர் , சீதை, லட்சுமணன், ஆகியோர் எழுந்தருளினர். அலங்காரம்,சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைந்தது. இன்று (ஜூலை 4) காலை தீர்த்த உற்சவமும், இரவு தோளுக்கினியன் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகச்செயலாளர் வி.மகேந்திரன். சரக அலுவலர் சி.சுவாமிநாதன், ஆலய விசாரணைதாரர் ஜி.கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.