திருத்தணி முருகன் பள்ளியறை பூஜையில் மங்கள வாத்தியம் நிறுத்தம்
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், தினமும், இரவு நடக்கும் பள்ளியறை பூஜையின் போது, இரு மாதங்களாக மங்கள வாத்தியம் நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். காலை, 6:00 மணி முதல், இரவு, 8:45 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். மேலும், மாதந்தோறும் வரும் கிருத்திகை மற்றும் பிரதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மட்டும் அதிகாலை, 5:00 மணி, மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.இது தவிர, தினமும், இரவு, 8:45 மணிக்கு, (கோவில் நடை மூடுவதற்கு முன்) பள்ளியறை பூஜை நடந்து வருகிறது. இரு மாதங்கள் முன் வரை மேற்கண்ட பூஜைகளின் போது மங்கள வாத்தியம், தாளம் போன்ற வாத்தியங்களுடன் பூஜைகள் நடைபெறும். ஆனால், இரு மாதங்களாக, இரவு நடக்கும் பள்ளியறை பூஜைக்கு மட்டும் மங்கள வாத்தியம், தாளம் போன்ற வாத்தியங்கள் இசைப்பதில்லை. பள்ளியறை பூஜைக்கு, திருமணம் ஆகாத பக்தர்கள், குழந்தை இல்லாத தம்பதியினர் மற்றும் பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற்றுப்பவர்கள் தான் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். மங்கள வாத்தியம் இசைக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இது குறித்து, முருகன் கோவில் இணை ஆணையர் சிவாஜி கூறுகையில், ’பள்ளியறை பூஜைக்கு மங்கள வாத்தியம் இல்லை என, முருகன் திருவடி சபையினர் நேற்றுமுன்தினம் புகார் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். ’தவல், நாதஸ்வரம் மற்றும் தாளம் போடுபவர்களுக்கு, 42 நாள் பயிற்சிக்கு, பழனி கோவிலுக்கு செல்ல வேண்டும் என, இந்து அறநிலைய துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தான், அவர்கள் பயிற்சிக்கு சென்றுள்ளனர். இன்னும் பயிற்சி முடியவில்லை. பயிற்சி முடிந்து வந்தவுடன் பள்ளியறை பூஜை, வாத்தியங்களுடன் நடக்கும்’ என்றார்.