உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் தேரோட்டம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் தேரோட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம், வழக்கத்தை விட கூடுதல் பிரமாண்டத்தோடு கோலாகலமாக நடைபெற்றது. மதுராந்தகத்தில் ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த, 30ம் தேதி உற்சாகத்தோடு துவங்கியது. 2ல், கொடியேற்றம், தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் என, களைகட்டிய உற்சவத்தின் முக்கிய நிகழ்வான, 8ம் நாள் திருத்தேர் பவனி, நேற்று நடைபெற்றது. கடந்த ஆண்டுகளை விட, கூடுதல் உற்சாகத்தோடு அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். காலை, 9:40 மணிக்கு, நிலையிலிருந்து கிளம்பிய தேர், மதுராந்தகம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனித்தது; பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.சில காரணங்களால், கோவிலின் முக்கிய அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், பிரம்மோற்சவ நிகழ்வின் போது, மேலும் ஒரு அர்ச்சகர் விடுப்பு எடுக்க முயன்றது, நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையையும் நிர்வாகத் தரப்பு சமாளித்து, வழக்கத்தை விட சிறப்பாக பிரம்மோற்சவத்தைநடத்தியதாக, ஆன்மிக அன்பர்கள் தெரிவித்தனர். மதுராந்தகம், டி.எஸ்.பி., தலைமையில் ஏராளமான போலீசாரும், காவல் நண்பர்களும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குடிநீர் பற்றாக்குறை:
வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் இந்தாண்டு குவிந்தாலும், அவர்களுக்கான குடிநீர்த் தேவையை நகராட்சி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை. அடுத்தாண்டாவது, முக்கிய வீதிகளில், ஆங்காங்கே தற்காலிக சிறு குடிநீர் தொட்டிகளை வைக்க, நகராட்சி ஆவன செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !