மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1, பாதம்) (ஆரம்பம் சுமார் அப்புறம் ஜோர்)
பெரியோரை மதிப்புடன் நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!
ராகு சிம்ம ராசியில் இருந்து 4-ம் இடமான கடகத்திற்கு வருவதால் குடும்ப பிரச்னை மறையும். அதே நேரம் வீண் அலைச்சல் உருவாகலாம்.
கும்பத்தில் உள்ள கேது, 10-ம் இடமான மகரத்திற்கு செல்வதால் உடல் உபாதை ஏற்படலாம். ஆனால் பிற்பகுதியில் முயற்சியில் வெற்றியும், ஜோரான வளர்ச்சியும் உண்டாகும்.
ராசிக்கு 8ல் உள்ள சனிபகவான், முயற்சியில் தடை உருவாக்கலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். அவர் 2017 டிச. 18- ல் 8-ம் இடத்தில் இருந்து 9-ம் இடத்திற்கு மாறுகிறார். அதனால் முயற்சியில் தடை வரலாம். எதிரிகளின் தொல்லை தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
குரு பகவான் சாதகமாக இல்லா விட்டாலும் அவரது 9-ம் பார்வையால் நன்மை கிடைக்கும். மனதில் துணிச்சல் பிறக்கும்.
பண வரவு கூடும். அவர் 2017 ஆக. 31- வரை கன்னி ராசியில் இருப்பார். அதன் பிறகு வக்ர நிவர்த்தியாகி 7-ம்இடத்திற்கு செல்கிறார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 2018 பிப். 13-ல் 8-ம் இடத்திற்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. 8-ம் இடத்தில் இருக்கும் குருவால் மன வேதனை, நிலையற்ற தன்மை உண்டாகும். பொருளாதார சரிவு ஏற்படலாம். ஆனால் அவரது 7-ம் பார்வையால் ஆற்றல் மேம்படும். இனி காலவாரியான பலனைக் காணலாம்.
2017 ஜூலை – டிசம்பர் குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். கணவன், -மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். வீடு, மனை வாங்கும் எண்ணம் தடை படலாம். ஆக. 31 க்கு பிறகு குடும்பத்தில் குதூகுலம் உண்டாகும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். எதிரி தொல்லையை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். ஆக.31க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவை. விருது, பாராட்டு போன்றவை தள்ளிப் போகலாம். அரசியல்வாதிகள் கடினமாக உழைக்க
வேண்டியிருக்கும். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.மாணவர்கள் முயற்சிக்கேற்ற வளர்ச்சி காண்பர். சிலர் படிப்புக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் பிறந்த வீட்டினரின் உதவி கிடைக்கப் பெறுவர். 2018 ஜனவரி –2019 பிப்ரவரி ராகுவால் அவ்வப்போது பிரச்னை உருவாகலாம். குரு பகவான் -2018 ஏப்.9 முதல் 2018 வரை வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறியபின் நன்மை மேலோங்கும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி உயர்வு பெறுவர். மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. பெண்களுக்கு குழந்தைகளால் பெருமை சேரும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
பரிகாரம்: ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செவ்வாய், வெள்ளியில் காளி வழிபாடு சனிக்கிழமையில் அனுமனுக்கு தீபம்