உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை கோவில் திருப்பணி அடுத்தாண்டு நிறைவு!

சென்னிமலை கோவில் திருப்பணி அடுத்தாண்டு நிறைவு!

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் திருப்பணி ஓராண்டில் நிறைவு பெறும், என, சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் வெங்கடாசலம் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர், இக்குழுவின் தலைவர் பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமையில், நேற்று, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டனர். முதல் கட்டமாக சென்னிமலை வருகை தந்தனர். சென்னிமலை மலைக் கோவிலில் நடக்கும் ஐந்து நிலை ராஜகோபுர பணி உட்பட பல்வேறு திருப்பணிகளை பார்வையிட்டனர். பின் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

குழு தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது: இங்கு ஐந்து கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது இதில் 2.50 கோடி ரூபாய் அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. மீதி 2.50 கோடி ரூபாய் உபதாரர்கள் மூலம் பெறப்பட்டு, திருப்பணி திட்டமிட்டபடி நடந்து வருகிறது. மலைக் கோவிலுக்கு வரும் தார்ச்சாலையை விரிவுபடுத்தி, தடுப்புசுவர் எழுப்பும் திட்டம் ஏதும் இல்லை. பக்தர்கள் கோரிக்கை வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2012க்குள் பணிகள் அனைத்தும் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின், இக்குழவினர் ஈரோடு புறப்பட்டு சென்றனர். குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் வேளச்சேரி அசோக், ஆம்பூர் அஷ்லாம் பாட்ஷா, புதுக்கோட்டை முத்துகுமரன், திருப்பரம்குன்றம் ராஜா, காங்கேயம் நடராஜ், மொடக்குறிச்சி கிட்டுசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் சண்முகம், சட்டசபை சார்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன், அறநிலையத்துறை இணை கமிஷனர் புகழேந்திரன், உதவி கமிஷனர் தனபாலன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் மணிமேகலை ஆகியோர் வருகை தந்தனர். இக்குழுவினரை, சென்னிமலை யூனியன் தலைவர் கருப்புசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் தெய்வசிகாமணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !