சபரிமலையில் ஜூலை 30ல் நிறைபுத்தரிசி பூஜை
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜூலை 30ல் நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது. இதற்காக ஜூலை 29ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.ஆடி மாத பூஜைகள் முடிந்து, ஜூலை 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு, ஜூலை 29-ம் தேதி மாலை 5மணிக்கு மேல்சாந்தி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 10:00மணிக்கு நடை அடைக்கப்படும். ஜூலை 30-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனமும், அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து மேல்சாந்தி நெற்கதிர்களை தலையில் சுமந்து, கோயிலை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு செல்வார். தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த நெற்கதிர்கள் பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோட்டில் இருந்தும், கொல்லம் மாவட்டம் அச்சன்கோவிலில் இருந்தும் கொண்டு வரப்படும். இரவு 7 மணிக்கு படிபூஜை நடக்கும். 10மணிக்கு நடை அடைக்கப்படும்.இந்த பூஜைகளுடன் தற்போதைய தாழமண் தந்திரி கண்டரரு ராஜீவரருவின் பொறுப்பு காலம் நிறைவு பெறும். அடுத்து ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக., 16ல் நடைதிறக்கும்போது, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பொறுப்புகளை கவனிப்பார்.