கேது பெயர்ச்சி: கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை: சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம், பரிகார பூஜை நடைபெற்றது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் தேவார பாடல் பெற்ற சௌந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நவகிரகங்களில் சாயாக்கிரகமான கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். கேது பகவான் ஒன்னரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னோக்கி பெயர்ச்சியடைவார். அதன்படி ஒன்னரை ஆண்டுகளுக்கு பிறகு கேது பகவான் சரியாக பகல் 12:48மணிக்கு கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.
கேது பெயர்ச்சியை அடுத்து மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளாக கணிக்கப்பட்டுள்ளன. கேது பெயர்ச்சியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஸ்ரீகேது பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு 12:48 மணிக்கு மஹாதீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை பட்டு குருக்கள் தலைமையிலானோர் நடத்திவைத்தனர். இதனையடுத்து கேது பகவான் வெள்ளி கவசத்தில் அருள் பாளித்தார். கேது பெயர்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கேது பகவானை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோபி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.