கோவிலில் வெறும் கையால் சுட்ட ஏழு வடை ரூ.14,200க்கு ஏலம் போனது!
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே, ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், வெறும் கையால் சுட்ட வடையை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதில், ஏழு வடை, 14 ஆயிரத்து, 200 ரூபாய்க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே, ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடிப்பூர விழாவையொட்டி, நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பின், மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல், முள் மிதித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வழிபட்டனர்.
அதை தொடர்ந்து, கொதிக்கும் எண்ணெயில், வெறும் கையால் வடை சுடும் வழிபாடு நடந்தது. விரதமிருந்த பக்தர் ஒருவர், கொதிக்கும் எண்ணெயில் வடைகளை சுட்டு, அவற்றை கையால் எடுத்தார்.இந்த வடையை சாப்பிட்டால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி, சுடப்பட்ட வடைகள் ஏலம் விடப்பட்டன.முதல் வடை, 5,100 ரூபாய்; இரண்டாவது வடை, 4,600 ரூபாய்; மூன்றாவது வடை, 2,000 ரூபாய் உட்பட ஏழு வடைகள், 14 ஆயிரத்து, 200 ரூபாய்க்கு ஏலம் போனது.இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.