உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றுமைக்கு வித்திட்ட ’படி விளையாட்டு’ வரலாற்று நினைவு சின்னமாக மாறியது

ஒற்றுமைக்கு வித்திட்ட ’படி விளையாட்டு’ வரலாற்று நினைவு சின்னமாக மாறியது

நமது முன்னோர்கள் கிராம வாழ்க்கையில் பல வித்தியாசமான நடைமுறைகளை பின்பற்றினர். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக கிராம ஒற்றுமைக்கு வித்திட்ட ’படிவிளையாட்டு’ இருந்தது.

வணங்கும் ’படி’: பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்கள், கிராமம் தான் உலகம் என வாழ்ந்தனர். இந்த காலகட்டத்தில் பலவித நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. விவசாயமும், அதனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்ட மக்கள், மாலைநேரத்தில் பொழுதுபோக்கு மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்த இரண்டும் கலந்து உருவாக்கப்பட்டது தான் படிவிளையாட்டாகும். புதுமையான இந்த நடைமுறை பக்தியையும், ஒற்றுமையையும் வளர்த்தது. ’படி’ என்பது தானியங்களை அளக்கப்பயன்படும் பழமையான அளவை பாத்திரமாகும். அறுவடைக்குபின், களத்துமேட்டில் பயிர்கள் குவித்து வைக்கப்படும். இப்படி குவிக்கப்பட்ட பயிர்களை படியால் தான் அளந்து கொடுத்தனர். தொடக்க காலத்தில் மரத்தில் செய்யப்பட்டு, பின் வந்த காலத்தில் தகரம், அலுமினியம், தற்போது சில்வர்களில் உருவாக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு தானியத்தை அளந்து கொடுக்கும் போது ’பிடி’ என குறிப்பிட்ட சொல், பின்னாளில் ’படி’ என மாறியிருக்கலாம். தானியத்தை வீட்டில் சேமித்து வைக்கும் போதும், பண்டமாற்று முறையில் ஈடுபடும் போதும், படியால் அளப்பது தான் பழமையான வழக்கம். இதனால் ’படி’ மங்கலப்பொருளாக மதிக்கப்பட்டது. இன்றும், பல கிராமங்களில் வணங்கப்படும் பொருளாக ’படி’ உள்ளது.

முதல் நாள்: அடுத்த சாகுபடிக்கு காத்திருக்கும் மாசி மாதத்தில், கிராமங்களில் படிவிளையாட்டு தொடங்கும். ஒவ்வொரு கிராமத்திலும் ஆண் காவல்தெய்வம், பெண் தெய்வவழிபாடுகள் இருந்தன. பெரும்பாலும் விளைநிலங்களுக்கு மத்தியில் அல்லது அதற்கு அருகில் இந்த தெய்வங்களுக்கான கோவில் அமைந்திருக்கும். முழுநிலவு நாளில், இரவு தொடங்கியபின், பூசாரியுடன் பலர், கூட்டமாக சேர்ந்து, இந்த தெய்வத்துக்குரிய ஆயுதமான வேல், ஈட்டி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன், கோவிலிலுள்ள ’படி’யையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் சென்று, பக்திப்பாடல்களை பாடி, ஆடியபடி தானியம் சேகரிப்பார்கள். இதை தவசம் கேட்பது என குறிப்பிட்டனர்.

உடுக்கை, உருமி போன்ற இசைக்கருவிகள் இதற்கு பயன்படுத்தப்பட்டது. மக்கள் பயபக்தியோடு காத்திருந்து, உடுக்கை சத்தம் தங்கள் வீட்டு வாசலுக்கு வந்தவுடன், முறங்களில் தானியத்தை எடுத்து வந்து ’படி’யில், வழிய வழிய கொட்டுவார்கள், இந்த தானியம் மூட்டைகளில் சேகரிக்கப்படும். இதோடு, காணிக்கையும் சேர்த்து வழங்கி, தேங்காய் உடைத்து, பழம் வைத்து சூடம் ஏற்றி வழிபடுவார்கள். சில இடங்களில் பூசாரிக்கு அருள் வந்து குறிசொல்லும் நிகழ்வும் நடக்கும். இப்படி முதல்நாளில் அனைத்து வீடுகளுக்கும் சென்று சேகரித்த தானியத்தை சத்திரம், சாவடி போன்ற பொது இடத்தல் சேமிப்பார்கள். இதற்கே அதிகாலை ஆகிவிடும்.

இரண்டாம் நாள்: அடுத்தநாள், இரவு தொடங்கும் நேரத்தில் தானியத்தை எடுத்துக்கொண்டு, தங்களின் காவல் தெய்வங்களாக உள்ள, கன்னிமார், கருப்பணசாமி கோவில் வளாகத்துக்குச்சென்று, அடுப்பு மூட்டி சேகரித்த பொருட்களை பயன்படுத்தி சமைக்கத்தொடங்குவார்கள்.சில கிராமங்களில் சைவ, வைணவ கோவில்களிலும் நடக்கும். வீடுதோறும் தானியம் கொடுத்ததால், கிராமத்திலுள்ள அனைத்து மக்களும், தங்கள் பங்குக்கு வேலை செய்வார்கள்.பலர் காய்கறிகள் வெட்டித்தருவார்கள், சிலர் பாத்திரம் துலக்குவார்கள். மற்றவர்கள் அருகிலுள்ள தோட்டங்களுக்குச்சென்று, வாழைஇலையும், குடிக்க நீரும் கொண்டு வருவார்கள். இப்படி அனைவரும் கலந்து, சமைக்கப்படும் இந்த ’கூட்டாஞ்சோறு’ இரவுநேரம் தயார் ஆகிவிடும். இதற்கு பின், கோவிலில் வைத்து வழிபடுவார்கள். சிறிது நேரத்தில் நல்ல பவுர்ணமி நிலவொளியில், கோவில் வளாகத்தில் அனைவருக்கும் பந்தி ரெடியாகி விடும்.அனைவரும் சமமாக அமர்ந்து இந்த உணவை ரசித்து, சுவைத்து உண்பார்கள். இதற்குபின், ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசியபடிவீடு வந்து சேர்வார்கள். இதுதான் ’படிவிளையாட்டு’. இதனால், கிராமத்தில் ஒற்றுமையும், பக்தியும் வளர்ந்தது. மடத்துக்குளம் தாலுகா தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் நடைமுறையில் இருந்தது. தற்போது வரலாற்று நினைவாகிப்போனது. பொதுமக்கள் கூறுகையில், ’பலர் சேர்ந்து ஊருக்குள் சென்று தானியம் சேமிப்பதும், கிராமமே திரண்டு கோவிலுக்குசெல்வதும் மிகவும் அற்புதமான உணர்வாக இருந்தது’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !