குருவாயூர் கோவிலில் பிரான்ஸ் நாட்டினர் துலாபார காணிக்கை!
குருவாயூர் : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 15 பேர், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், துலாபார நேர்த்திக் கடன் செலுத்தினர். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு, இந்து மதத்தினரைத் தவிர, பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை. இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும், கோவிலுக்குள் செல்ல சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை கடைபிடித்தால் மட்டுமே, கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 15 பேர், சாய் சஞ்ஜீவினி அறக்கட்டளை நடத்தி வரும் கருத்தரங்கில் கலந்து கொள்ள, இங்கு வந்துள்ளனர். அவர்களிடம், கிருஷ்ணன் கோவிலின் மகிமை, பெருமை குறித்து விளக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நேர்த்திக் கடன் மற்றும் துலாபாரம் பற்றியும் விளக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 15 பேரும், துலாபார நேர்த்திக் கடன் செலுத்த, கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரான்ஸ் குழுவுக்கு, ஜாக்குலின் ஜெரா தலைமை தாங்கினார். அவர்களை, அறக்கட்டளையின் தலைவர் அரிநாராயணன், போலீஸ் டி.எஸ்.பி.சுரேஷ் ஆகியோர், கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். குழுவில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்களும், இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும், வேட்டியும், தோளில் துண்டும் மட்டுமே அணிந்து பய பக்தியுடன் காணப்பட்டனர். அவர்கள் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின், அவர்களுக்காக, துலாபாரம் (தராசு) கோவிலின் கிழக்கு பகுதியில் வைக்கப்பட்டது. அனைவரும், கதளி பழத்தை எடைக்கு எடையாக காணிக்கை செலுத்தினர். அவர்களுக்கு, 810 கிலோ எடைக்கு பழங்கள் தேவைப்பட்டன. அதற்காக, அவர்கள் 12 ஆயிரத்து 225 ரூபாயை கோவிலுக்குச் செலுத்தி ரசீது பெற்றனர்.