நாமக்கல் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு
நாமக்கல்: ஆடி, மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
ஆடி வெள்ளியை முன்னிட்டு, நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில், கொசவம்பட்டி மாரியம்மன் கோவில், பொன்விழாநகர் முத்து மாரியம்மன் கோவில் என, நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. நாமக்கல், ராஜகணபதி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், வரலட்சுமி நோன்பு கடைப்பிடித்து, பெண்கள் வழிபாடு செய்தனர். கடைவீதியில் உள்ள வாசவி மஹாலிலும், வரலட்சுமி நோன்பு இருந்த பெண்கள் பங்கேற்ற சிறப்பு பூஜை நடந்தது. அங்குள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன், வரலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* ராசிபுரம், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* பவேலூர், நன்செய் இடையார், வடகரையாத்தூர், குமாரபாளையம், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை உள்பட மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.