விநாயகர் சதுர்த்தி விழா: 1,008 சிலைகள் தயார்
ஈரோடு: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, இந்து முன்னணி சார்பில், 1,008 விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்ய, தயார் நிலையில் உள்ளன. ஈரோடு மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பில், பல்வேறு இடங்களில் ஆண்டு தோறும், 1,008 விநாயகர் சிலைகளை, விநாயகர் சதுர்த்திக்கு மூன்று நாட்களுக்கு முன் பிரதிஷ்டை செய்வர். தினமும் வழிபாட்டுடன், விநாயகர் சதுர்த்தி அன்று, காவிரி ஆறு உட்பட நீர் நிலைகளில் கரைப்பர். வரும், 25ல் சதுர்த்தி நடக்க உள்ளதால், இந்தாண்டும், 1,008 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: இந்து முன்னணி அமைப்பில் உள்ளவர்களுக்காக, அரசின் விதிப்படி, மாசு ஏற்படாத வகையில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பல வர்ணத்தில், 3, 5, 7, 9, 11 அடி உயரங்களில் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே இவை விற்கப்படும். மாநகர மாவட்ட அளவில், 1,008 சிலைகளும், ஈரோட்டில், 207 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.