குச்சனூர் சோணை கருப்பண சுவாமிக்கு மது படையல்
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள சோணை கருப்பண சுவாமிக்கு இன்று இரவு 7:00 மணிக்கு மேல் மது படையல் வழங்கப்படுகிறது. குச்சனுாரில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் உள்ளது. அனுகிரக மூர்த்தியான மூலவரை தரிசிக்க சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருவர். ஆடி சனி வாரத் விழா ஜூலை 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை, பரிவார மூர்த்தியான சோணை கருப்பண சுவாமிக்கு மது படைக்கப்படும். பக்தர்கள் வழங்கும் மதுபாட்டில்களை சுவாமி பாதத்தில் உள்ள மண் கலயத்தில் ஊற்றுவர். பூஜைகள் முடிந்த பின் அறநிலையத்துறை சார்பில் மக்களுக்கு கிடா விருந்து வழங்கப்படும். இன்று இரவு 7:00 மணிக்கு மேல் மது படையல் வழங்கப்படும்.
அர்ச்சகர்கள் கூறியதாவது:தீர்க்கமுடியாத பிரச்னைகளை சோணை கருப்பண சுவாமியிடம் முறையிட்டால் நிவர்த்தியாகும். இதற்கு காணிக்கையாக, மது படையல் வழங்குவதாக வேண்டிக் கொள்கின்றனர். மது பாட்டில்களை கோயில் அலுவலகத்தில் பெயருடன் பதிவு செய்ய வேண்டும். சுவாமி பாதத்தில் உள்ள ஒரு லிட்டர் அளவுள்ள மண் கலயத்தில் மது ஊற்றப்படும். அப்போது மது மணம் வராது. மது முழுவதையும் சோணை கருப்பண சுவாமி குடிப்பதாக ஐதீகம். சிறப்பு பூஜை நிறைவடைந்தபின் கண் சிவந்து நிற்கும் சோணை கருப்பண சுவாமியை பக்தர்கள் தரிசிப்பர், என்றனர். இவ்வாறு அவர் கூறினார்.