காலபைரவர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில், பெரியஏரி மேற்கு கோடிக்கரையில் உள்ள காலபைரவர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதில், 2,000 பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை பெரியஏரி மேற்கு கோடிக்கரையில் உள்ள காலபைரவர் கோவில் கும்பாபிஷேக விழா, ஜூன், 27ல் நடந்தது. இதையடுத்து, 48நாள் மண்டல பூஜை நடந்து வந்தது. நேற்று நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி, விசேஷ பூஜை, ஹோமங்கள் நடந்தன.
காலை, 11:00 மணிக்கு, 165 கிராமங்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பெண்கள், பழைய பேட்டை தர்மராஜா கோவிலில் ஒன்று கூடி, அங்கிருந்து கால பைரவர் கோவிலுக்கு பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில், கோலாட்டம், மயிலாட்டம் மற்றும் பம்பைகள் முழங்க ஊர்வலமாக சென்றனர். பின், பகல், 12:30 மணிக்கு, கால பைரவருக்கு பால் அபிஷேகம் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. மதியம், 2:30 மணிக்கு காலபைரவ உற்சவர் கோவிலை சுற்றி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிகுழுவினர் மற்றும் 165 கிராம குலதெய்வ வழிபடுபவர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி, டவுன் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.