அல்லேரி முனியப்பன் கோவிலில் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு
பனமரத்துப்பட்டி: அல்லேரி முனியப்பன் கோவிலில் ஆடு, கோழி பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மல்லூர் அருகே, அல்லேரி முனியப்பன் கோவில் உள்ளது. அங்கு, அமாவாசை, வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில், பூஜை நடக்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து வரும் மக்கள், பில்லி, சூனியம் பாதிப்பு விலகவும், குடும்ப பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படவும், வழக்குகள் முடிவுக்கு வரவும், முனியப்பன் சுவாமியை வணங்குகின்றனர். பூசாரிகள், மக்கள் வாங்கி வரும் எலுமிச்சை பழத்தை, சுவாமி மடியில் வைத்து, பூஜை செய்து தருகின்றனர். அப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுவதால், ஆடு, கோழி பலியிட்டு, மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். நேற்று, அங்கு பொங்கல் வைத்து, 10க்கும் மேற்பட்ட ஆடு, 30க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு, மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் வளாகத்தில் சமைத்து, உறவினர்கள், நண்பர்களை அழைத்து, விருந்து பரிமாறினர். ஏராளமான பக்தர்கள், வேண்டுதல் வைத்து சென்றனர்.