விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாரான சிலைகள்
அரூர்: அரூர் அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி, பல்வேறு வடிவங்களில், 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 25ல், விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புதன் சந்தை அருகே, பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஸ்தபதி குமரேசன் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறேன். அரசு உத்தரவுப்படி, நீர்நிலைகள் மாசுபடாத வகையில், களிமண் மற்றும் காகிதக்கூழ் பயன் படுத்தி, தண்ணீரில் எளிதில் கரையும் வகையில், சிலைகள் தயாரிக்கப்படுகிறது. சிலைகளுக்கு ரசாயனம் கலக்காத வர்ணம் பூசப்படுகிறது. இங்கு ஆஞ்சநேயர் மீது அமர்ந்த நிலையில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி சுவாமிக்கு இடையில் விநாயகர், நந்தி விநாயகர், மயில், யானை விநாயகர், செல்வ விநாயகர், காமதேனு விநாயகர், சிவன், பார்வதி விநாயகர் என, பல்வேறு வடிவங்களில், அரை அடி முதல், 13 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் உள்ளன. ஐம்பது ரூபாய் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்ட, 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.