ஒழுக்கத்தை கடைபிடிப்போம் - சொல்கிறார் கிருஷ்ணப்ரேமி சுவாமி
காற்றின் பணி உலர்த்துவது. நெருப்பின் பணி சுடுவது. தண்ணீரின் பணி நனைப்பது. அதுபோல மனிதர்களுக்கு ஒழுக்கத்தை கடைபிடிப்பது கடமையாக இருக்கிறது. ரோஜா செடியிலிருந்து பூவை மட்டுமே பறிக்க வேண்டும். அதிலுள்ள முள்ளை சீவ வேண்டியதில்லை. அதுபோல, புத்தகங்களில் இருந்து சாரத்தை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். தேவையற்றவற்றை தள்ளி விடலாம். கடலில் ஒரு அலை முடிந்ததும், மற்றொரு அலை கிளம்பும். அதுபோல, முட்டாளின் மனதில் பல சந்தேகங்கள் கிளம்பி கொண்டே இருக்கும். அதை தீர்க்க நினைப்பது கடல் அலைகளை அடக்க முயல்வதாகும். கடிகாரம் இயங்க சாவி கொடுக்க ஒருவன் எப்படி வேண்டுமோ, அதுபோல் உலகம் இயங்க கடவுள் இருக்கிறார். உடலுக்குள் உள்ள உயிரையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான கடவுளை எப்படி காண முடியும்? உடலின் இயக்கத்தை கொண்டு உயிர் இருப்பதை அறிகிறோம். அதுபோல உலகத்தின் இயக்கமே கடவுளின் இருப்பினை உணர்வதற்கு போதுமானதாக இருக்கிறது. ஈரமண்ணில் செடி வளர்கிறது. காய்ந்த மண்ணில் பட்டு விடுகிறது. அது போல இரக்கமுள்ள மனதில் பக்தி வளர்கிறது. கல் மனதில் இது போன்ற உயர்ந்த விஷயங்கள் தோன்றுவதில்லை.