பெரியாறு அணையில் மழை வேண்டி தேக்கடியில் பிரார்த்தனை
கூடலுார்: பெரியாறு அணையில் மழை வேண்டி கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், மும்மதத்தினரை அழைத்து தேக்கடியில் பிரார்த்தனை நடத்தினர். பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால் , இந்த நீரை நம்பியுள்ள கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியவில்லை. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன், ஜூலை மாதத்தில்கூட அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியவில்லை. இந்த நிலை நீடித்தால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி நிலங்கள் குறையும் அபாய நிலை ஏற்படும்.
இந்நிலையில் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை பெய்ய வேண்டி மும்மதத்தினரை அழைத்து, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தேக்கடியில் நேற்று காலை 10:00 மணிக்கு பிரார்த்தனை நடத்தினர். அங்கு தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படும் ஷட்டர் அருகே உள்ள திறவை வாய்க்காலில் நின்று பிரார்த்தனை செய்தனர். இதில் கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் நாராயணன், உத்தமபாளையம் விவசாயிகள் சங்க தலைவர் தர்வீஸ் மைதீன், விவசாயிகள் பங்கேற்றனர்.
கைவிரித்த பொதுப்பணித்துறை: இது குறித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தனர். இதனால், ஏராளமான விவசாயிகள் வாகனங்களில் தேக்கடிக்கு வந்தனர். ஆனால், அவர்கள் தேக்கடிக்கு வர எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக்கூறி கேரள வனத்துறையினர், தேக்கடி செக்போஸ்ட் அருகே தடுத்து நிறுத்தினர். இது குறித்து பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் விவசாயிகள் இடுக்கி , தேனி கலெக்டரிடம் அலைபேசியில் பேசி அனுமதி பெற்று பிரார்த்தனைக்கு சென்றனர். இதனால், தேக்கடி செக்போஸ்ட் அருகே ஒரு மணி நேரம் வரை பரபரப்பான சூழல் நிலவியது.