உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள்

காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள்

திருச்சி: திருச்சி அருகே, பனையக்குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில், சிவலிங்கம் மீது படும், சூரியக் கதிர்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் வழியில், காவிரியின் தென் கரையில் உள்ள பனையக்குறிச்சி கிராமத்தில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில், இந்த கோவிலின் கருவறை மூலவர் சிவலிங்கம் மீது, காலை நேரத்தில் சூரிய கதிர்கள் விழும். இதை, ’சூரிய வழிபாடு’ என்கின்றனர். இந்த ஆண்டுக்கான சூரிய வழிபாடு, நேற்று நிகழ்ந்தது. காலை, 6:00 மணிக்கு விழத்துவங்கிய சூரிய கதிர்கள், படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள மூலவர் சிவலிங்கம் மீது திலகமிட்டது போல் பட்டு ஜொலித்தது. கோவில் அர்ச்சகர் சுவாமிநாதன், ”ஆண்டுதோறும், சூரியன் தென்கிழக்காக செல்லும் தட்சிணாயன காலத்தில், சூரிய பகவான், சிவனை வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். 25ம் தேதி வரை, தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு, இது போன்ற நிகழ்வை காண முடியும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !