சிங்கம்புணரியில் விநாயகர் சிலை ஊர்வலம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இங்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி சீரணி அரங்கம் ஐயப்பன் கோயில், சந்திவீரன்கூடம், நேதாஜிநகர், வடக்குத்தெரு, முழுவீரன்தெரு, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. 3 நாள் வழிபாட்டின் போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆக. 27 ம் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு மகேந்திரபூபதி தலைமை வகித்தார். ஊர்வலத்தில் பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக், திருப்பூர் மாவட்ட வித்யாபாரதி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகோபால், சொக்கநாதபுரம் சாக்த அய்யப்பசாமி பேசினர். சத்தியசீலன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 40 வாகனங்களில் 3 முதல் 9 அடி வரை உயரத்திலான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இரவு 8:00 மணிக்கு சீரணி அரங்கம் அருகிலிருந்து துவங்கிய இந்த ஊர்வலம் வீதிகளின் வழியாக சேவுகப்பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை அடைந்தது. அங்கு இரவு 10:00க்கு கரைக்கப்பட்டன.