யாத்திரைத் தலமான தியேட்டர்
கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்து பாடிக் கலந்தவள் பக்தமீரா. இம்மீராவின் வரலாறு திரைப்படமாக தமிழ், இந்தியில் திரைபடமாக்கப்பட்டது. இதில் மீராவாக நடித்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. கண்ணன் லீலை புரிந்த பிருந்தாவனத்திலேயே காட்சிகள் படமாக்கப்பட்டன. தென்னாட்டில் உள்ள மதுரையில் பிறந்து, வட நாட்டில் இருக்கும் மதுராவில் பாடல்கள் பாடி, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஆன்மிகப்பாலமாக எம்.எஸ். சுப்புலட்சுமி விளங்கினார். இசையாலே கண்ணனோடு கலந்த மீராவாக வாழ்ந்து காட்டினார். கவிக்குயிலான சரோஜினி, இந்திப்படம் மீராவின் அறிமுக உரையில், எம். எஸ்.,ஸின் கவர்ந்திழுக்கும் குரலைக் கேட்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு எல்லோருக்கும் ஏற்படும் என்று நான் திடமாக நம்புகிறேன். இவர் மீராவாக நடிக்கவில்லை. மீராவே இவர் தான் என்று எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். மக்களின் வரவேற்பால் டில்லி, மும்பை, @கால்கட்டா, சென்னை என்று நகரங்களில் மீரா திரைப்படம் மாதக்கணக்கில் ஓடியது. திரையரங்குகள் யாத்திரைத் தலமாகி விட்டன. இசைப்பிரியர்களும் பக்தி உள்ளவர்களும் மீராவைத் தரிசனம் செய்ய கூடுகிறார்கள், என்று இந்தி நாளிதழ்கள் விமர்சனம் செய்தன.