உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை!

40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை!

ஊட்டி:மலேசியாவில் உள்ள முருகன் சிலையை போன்று, ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள, 40 அடி உயர சிலை, நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள, ஜலகண்டேஸ்வரர் உடனமர் ஜலகண்டேஸ்வரி மற்றும் பாலதண்டாயுதபாணி கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடந்து வந்தன. ஊட்டியில் உள்ள சோழிய வேளாளர் தெய்வீக குழுவின் சார்பில், திருப்பணிக்குழு தலைவர் வரதராஜன் தலைமையில், 40 அடி திருமுருகன் சிலை அமைக்கப்பட்டு, நேற்று நடந்த கும்பாபிஷேகத்தின் போது பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோவில் அர்ச்சகர் திருஞான சம்பந்தம் கூறியதாவது:கோவிலின் அருகே, ஐந்து அடி உயரத்தில் பீடம் அமைத்து அதன்மீது, 40 அடியில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சோழிய வேளாளர் தெய்வீகக் குழுவின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை வடிவமைப்புகளை, திருவாரூரை சேர்ந்த ஆதிமூலம், அருவங்காடு நடராஜன், பாபு மற்றும் பல சிற்பிகளின் உதவியுடன் சிமென்ட், கம்பிகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே உயரமான சிலை என்ற பெருமையும் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு முருகன் சிலைக்கு, தங்க நிற வர்ணம் பூசப்படும்.இவ்வாறு அவர் கூறினார். சுற்றுலா நகரமான ஊட்டியில், மலேசியாவில் உள்ளது போன்று, முருகன் சிலை அமைத்திருப்பது இப்பகுதியில் வசிக்கும் பக்தர்களை மட்டுமில்லாமல், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !