உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்மநாப சுவாமி கோவிலில் 58 கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு!

பத்மநாப சுவாமி கோவிலில் 58 கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிப்பு!

திருவனந்தபுரம் : பாதுகாப்பு கருதி, பத்மநாப சுவாமி கோவிலில் உள்ளும், புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் துவங்கியுள்ளன. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய பொக்கிஷங்கள் உள்ளன. இதனால், அங்கு பாதுகாப்பை பலப்படுத்த, மாநில அரசுக்கும், கோவில் நிர்வாக அறக்கட்டளைக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஐவர் கமிட்டியையும் நியமித்தது. மதிப்பீடு பணிகள் துவங்குவதற்கு முன், கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. கோவிலுக்கு, தற்போது 24 மணி நேரமும் செயல்படும், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக, 360 டிகிரி வரை சுழன்று, கோவிலின் பல்வேறு பகுதிகளை கண்காணிக்கவல்ல, அதிநவீன 58 கேமராக்கள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ளன. பத்ம தீர்த்தக்கரை, சுற்றுச் சுவர்கள், கோவிலின் நான்கு வாயில்கள், சீவேலி (உற்சவ மூர்த்தி கோவிலிலுக்குள் வலம் வரும் நிகழ்ச்சி) பிரகாரம், நாலம்பலம், பொக்கிஷங்கள் உள்ள அறைகள் போன்றவற்றில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும், கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடனும் இணைக்கப்பட்டு, கோவிலின் முக்கிய பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவிலுக்குள் நுழையும் அனைவரும், தரிசனம் முடிந்து வெளியேறும் வரை, அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மாதம் வரை பாதுகாக்கப்படும். கேமராக்களை பொருத்தி, தொழில்நுட்ப வசதிகளையும், பராமரிப்பையும் கெல்ட்ரான் நிறுவனம் வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !