உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருகிறது ஜாத்திரை: ஆடுகள் ஜாக்கிரதை!

வருகிறது ஜாத்திரை: ஆடுகள் ஜாக்கிரதை!

ஆர்.கே.பேட்டை;அம்மன் கோவில்களில் நடைபெறும் ஜாத்திரை விழா, வரும் 10ம் தேதி, எல்லை பொங்கலுடன் துவங்குகிறது. அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கிராம தேவதையான அம்மனுக்கு ஆவணி மாதத்தில் நடத்தும் ஜாத்திரை விழா, வரும் 10ம் தேதி, மாலை, எல்லை பொங்கலுடன் துவங்குகிறது. அன்று நள்ளிரவு, சாட்டு நடத்தப்படுகிறது. எல்லை பொங்கல் துவங்கி, அம்மனை கங்கையில் கரைக்கும் வரையில், ஏராளமான ஆடுகளை அம்மனுக்கு பலியிடுவது பகுதிவாசிகளின் வழக்கமாக உள்ளது.

அம்மையார்குப்பம், காமாட்சியம்மன் கோவிலில், வரும் 10ம் தேதி, சாட்டு, 11ம் தேதி, பெண்கள் மாவிளக்கு ஏற்றி விரதத்தை துவங்குகின்றனர். 12ம் தேதி, பூந்தேர் ஊர்வலம் மற்றும் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளுகிறார். வரும் 13ம் தேதி, இரவு யானை வாகனத்தில் உலா. வியாழக்கிழமை காமதேனு வாகனத்திலும் எழுந்தருளும் அம்மன், வெள்ளிக்கிழமை குதிரை வாகனத்தில் உலா வருகிறார். பொதட்டூர்பேட்டையில் நடைபெறும் ஆறு நாள் ஜாத்திரைக்கான ஆட்டு சந்தை நாளை துவங்குகிறது. பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை பலியிட உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு, ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட உள்ளன.ஜாத்திரை விழா என்றாலே, அசைவ படையல் நிச்சயம் இடம்பெறும் என்பதால், இது ஆடுகளுக்கு சோதனையான காலகட்டம் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !