பத்மநாப சுவாமியை தரிசிக்க பாடகர் யேசுதாஸ் விண்ணப்பம்
திருவனந்தபுரம்: கர்நாடக இசைக் கலைஞர், கே.ஜே.யேசுதாஸ், திருவனந்தபுரத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கோரி, கோவில் நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த, கர்நாடக இசைக்கலைஞரும், பிரபல பின்னணி பாடகருமான, கே.ஜே.யேசுதாஸ், பத்மநாப சுவாமி கோவிலில் வழிபட அனுமதி கோரி, கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த யேசுதாஸ், ஹிந்து மதத்தில் தனக்குள்ள ஆழ்ந்த பற்றை விளக்கிக் கூறி, பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். செப்., 30ம் தேதி, விஜயதசமி தினத்தன்று, கோவிலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக, அவர் கூறிஉள்ளார். கோவில் வழக்கப்படி, ஹிந்து மதத்தில் நம்பிக்கை உள்ள எவரும், பத்மநாப சுவாமியை தரிசனம் செய்து வழிபடலாம். எனவே, அவர், கோவிலுக்கு வருவதில் தடை இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.